பாரீஸில் குளிர்காலம்தான் கொண்டாட்ட காலம். கடைசி நேரப் பண்டிகை பொருள் வாங்குவோர் கடைகளில் குவிகிறார்கள்.
வசதி படைத்தவர்கள் வசிக்கும், செயின் சல்பிஸ் பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான தேவாலயம், பப்கள், கஃபேக்களில் ஆயிரக்கணக்கானோர் குவிகிறார்கள்.
ஆடை அலங்கார அங்காடி
92 வயதான மொஹன்ஜித் கிரேவால் என்ற இந்திய பெண் நடத்தும் ஆடை அலங்கார கடையிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இவர், இந்திய ஆடை வடிவமைப்பு தூதுவர் என்று அழைக்கப்படுகிறார். 1962 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பு உலகில் கால் பதித்த அவர், தான் இந்திய கலாச்சாரத்தை மதிப்பதாக கூறுகிறார்.

இனி அவரே தொடர்கிறார்…
“எனது ஒவ்வொரு சேகரிப்பும், ஒவ்வொரு பொருட்களும் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியைப் பற்றிப் பேசுகின்றன. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் சாட்சிகளாக இருக்கின்றன.
ஆடை வேலைப்பாட்டில் ஆர்வம்
ஆடை வேலைப்பாடுகளில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் இந்தியப் பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன். என் தயாரிப்புகளில் மேட் இன் இந்தியா என்ற முத்திரையைப் பதிக்க விரும்புகிறேன்.
இந்தியாவில் ஆடை வடிவமைப்புகள் தரமானதாக இருக்கும். ஆடைகள் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதால், சிரத்தை எடுத்துக் கொள்கிறேன்.
பத்திரிகையாளராகப் பணி
பிரிவினைக்குப் பிறகு என் குடும்பம் லாகூரிலிருந்து பாட்டியாலாவுக்கு குடிபெயர்ந்தது. 1950களில் நான் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றேன்.
ஆராய்ச்சிப் படிப்பை முடித்ததும், நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் ஹெரால்டு ட்ரைபூன் ஆகிய பத்திரிகைகளில் பத்திரிகையாளராகப் பணியாற்றினேன். அந்த காலகட்டம் உண்மையிலேயே உணர்ச்சிபூர்வமானது.
அதன்பின் 1960ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினேன். காந்தி இல்லாத இந்தியாவை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
சாதிக்க முனைப்பு
எவ்வித திட்டங்களும் இன்றி, பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தியாவிலிருந்து பாரிசுக்கு சென்று நிறைய விசயங்களை கற்றேன்.
பாரிஸ் போன்ற நகரங்களில் இந்திய கைவினைத்திறனை காட்சிப்படுத்தி விற்பனை செய்தேன். பிரெஞ்சுக்காரர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு, ஆடை வடிவமைப்புகளைச் செய்தேன்.
நடிகைக்கு உடைகள்
பிரெஞ்சு நடிகை கேத்தரின் டெனியூவ் நான் தயாரித்த ஆடைகளை அணிந்திருக்கிறார். இப்போதெல்லாம் எல்லோரும் ஒரே மாதிரியான ஆடைகளையே அணிகிறார்கள்.
இன்னும் நான் ஆன்லைன் விற்பனையை நாடவில்லை. நேரடி வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ளேன்.

நேரடியாக விற்பனை செய்தால்தான், அந்தப் படைப்புகளின் பின்னணியில் உள்ள வேலை மற்றும் அழகை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களின் உணர்வைக் காண முடியும், அதற்கேற்ப நானும் மேம்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.
92 வயதிலும் ஆடைகளை வடிவமைத்து, அவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறி விற்பனை செய்யும் இந்த மூதாட்டி, இந்திய கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவே பிரான்ஸ் மக்களால் பார்க்கப்படுகிறார்.
-எம். மோகன்
நன்றி : திபெட்டர் இந்தியா