அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான இந்தியர் அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அமெரிக்காவில் உயர் பதவி
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 7 வயதாகும்போது அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார்.

தற்போது 58 வயதாகும் அவர், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார்.
துணை ஆளுநரான இந்திய பெண்
பகவத் கீதை மீது சத்தியம் செய்து அவர் பதவி ஏற்றார். மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகி இருக்கும் முதல் இந்தியர், முதல் கறுப்பினத்தவர், முதல் பெண் ஆகிய பெருமைகளுக்கு இவர் சொந்தக்காரராகி இருக்கிறார்.
பதவியேற்றபின் பேசிய அருணா மில்லர், ”துணைநிலை ஆளுநராகத் தேர்வு செய்த மேரிலேண்ட் வாக்காளர்களுக்கு மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களால் வரலாறு
மேரிலேண்ட் என்னைப் பெருமை அடையச் செய்துள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. நாம் தற்போது ஒரு வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம்.

அதிகாரம் வரலாற்றை உருவாக்குவதில்லை; மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. எனது இந்த வெற்றி நம் அனைவருக்குமானது” என தெரிவித்துள்ளார்.
சாதித்து காட்டிய பெண்மணி
அருணா மில்லரின் தந்தை பொறியியல் மாணவராக 1960-களில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வேலை தேடிக்கொண்டு 1972-ல் தனது குடும்பத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, 7 வயது சிறுமியாக அருணா அமெரிக்கா சென்றுள்ளார். அருணாவுக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
-எம்.மோகன்