மகாபாரதக் கூத்தின் நிஜமுகம் – 45 ஆண்டுகளாக கலைஞர் தேவன்

the-real-face-of-mahabharata-koothu-artist-god-for-45 years
[speaker]

காஞ்சிபுரம் அருகே பாலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது குண்டையார் தண்டலம் என்ற சிறு கிராமம். ஆனால், அது இருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில்.

ஊரின் முனையில் ஒரு பெரிய ஆலமரம். அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் வரும் தெருவில்தான் பாரம்பரியமிக்க கூத்துக் கலைஞர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

தொடரும் நாடகப் பரம்பரை

தாத்தா, அப்பா எனத் தொடரும் பரம்பரையில் வரும் கலைஞர் தேவனுக்கு வயது 58. இன்றும் அவர் ஓய்வின்றி கிராமங்களில் மகாபாரதக் கூத்துகளை நடத்திவருகிறார். தனக்குக் கலைமாமணி விருது கிடைக்காத வருத்தம் அவரிடம் பேசும்போது வெளிப்படுகிறது.

the-real-face-of-mahabharata-koothu-artist-god-for-45 years

நாம் குண்டையார்தண்டலம் கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, அப்போதுதான் கோயில் திருவிழாவிலிருந்து வீடு திரும்பியிருந்தார் தேவன். ஓபன் ஹாரிசான் தளத்திடம் பேசிய அவர், கூத்துக்கலை பக்கம் வந்த கதையை விரிவாக எடுத்துரைத்தார்.

எங்க தாத்தா சின்னக் குழந்தை, அப்பா வரதப்ப ஆசிரியர், சித்தப்பா கலைமாமணி பாலகிருஷ்ண ஆசிரியர், அடுத்த தலைமுறையில் அண்ணன் தெட்சிணாமூர்த்தி ஆசிரியர்.

சித்தப்பா பிள்ளை முருகன், அண்ணன் பிள்ளை குமார் மற்றும் நான் உள்பட ஐந்து தலைமுறையாக கூத்து ஆடிவருகிறோம்.

ஐந்தாம் வகுப்பு படித்தேன்

பள்ளியில் படிக்கும் காலத்தில் அப்பாவுடன் கூத்துக்குப் போவேன். பல ஊர்களுக்குச் சென்று கூத்து நடத்திவிட்டு வீடு திரும்புவார் அப்பா. நாங்கள் சலவைத் தொழில் செய்துவந்தோம்.

சலவை வேலை செய்தால்தான் சாப்பாடு. நானும் பிழைப்புக்காக என் பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுப்புடன் பாதியில் நிறுத்திவிட்டேன்.

the-real-face-of-mahabharata-koothu-artist-god-for-45 years

எங்க சித்தப்பா என்னைச் சொந்தப் பிள்ளையாக வளர்த்துவந்தார். கூத்து தொடர்பான எல்லா பணிகளையும் உற்சாகத்துடன் கற்றுக்கொடுத்தார்.

ஆர்மோனியம் வாசிப்பைக் கற்றுக்கொண்டேன்.
டிரங்கு பெட்டியில் பொருட்களை வைத்துக்கொண்டு சைக்கிளில் கூத்துக்கு அழைத்துச் செல்வார்.

கூத்து நடத்தினால் கிடைக்கும் அரையணா, ஓரையணா காசுகளைச் சேர்த்துவைப்பேன். அரையணா காசுக்காக கூத்து நடத்திய காலம் அது. மகாபாரதம் கதையை 18 ராத்திரி நாடகம் நடத்துவோம்.

புராணம், விலாசம் இருக்கிறது. ஆலம்பாடி கிராமத்தில் பாரதம் நாடகம் நடந்தது. அர்ச்சுனன் தபசு நடக்கும் தம்பிமார் பாண்டவர்கள் ஐந்து பேர் போவோம்.

அர்ச்சுனன் தபசில் மரமேறினேன்

அன்றிரவு நான் தூங்கிக்கொண்டிருந்தேன். என்னை எழுப்பி குங்குமப் பொட்டுவைத்து வேஷம் கட்டிவிட்டார்கள். நாடக சபைக்குச் செல்லும்போது நான் பதற்றத்தில் வாந்தி எடுத்துவிட்டேன். வாத்தியார் பிள்ளை வாத்தி எடுத்தது என்று எனக்கு வெட்கமாகிவிட்டது.

the-real-face-of-mahabharata-koothu-artist-god-for-45 years

பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூத்துக்குப் போகத் தொடங்கி, பெரிய வேஷம் கட்ட ஆரம்பித்தேன். 1984 ஆம் ஆண்டு கல்யாணம்.

அப்போது எனக்கு 21 வயது. அடுத்த சில மாதங்களில் கூத்து ஆடினேன். அந்தக் காலத்தில் தபசு மரத்தில் வேறு குடும்பத்தினர்தான் ஏறமுடியும். சலவைத் தொழிலாளர்களான நாங்கள் ஏறமுடியாது.

அர்ச்சுனன் தபசுக்காகவே மரம் ஏறுவதற்கு தங்கவேலு நாயக்கர் வருவார். அவர் சட்டை எல்லாம் போடமாட்டார்.

எத்தனை நாளைக்கு ஊர் ஊராகப் போய்க்கொண்டிருப்பது என்ற கேள்வி எழுந்தது. ஒரு ஊரில் மகாபாரதம் கூத்து போடுவார். இன்னொரு ஊருக்கு வரமாட்டார்.

ஒரு கலைஞராக உயர்ந்தேன்

பிறகு கிராம முக்கியஸ்தர்களைப் பார்த்து என்னை மரமேற அனுமதி கேட்டார் அப்பா. அடுத்து என்னை விரதம் இருக்கவைத்து மரமேறச் சொன்னார்கள். எல்லோரும் அப்படி ஏறமுடியாது.

அதற்கென விரதம் இருந்து தயாராக வேண்டும். இப்படி பலவிதமான அனுபவங்களுடன் ஒரு கலைஞராக உயர்ந்துவந்திருக்கிறேன்” என்று கூத்துக்கட்டுவதைப் போலச் சரளமாகப் பேசுகிறார்.

the-real-face-of-mahabharata-koothu-artist-god-for-45 years

இளமையில் ஒரு கலைஞனாக மாறிய காலகட்டத்தில் குண்டலேரி கிராமத்தில் நிகழ்ச்சி. அங்கு கிருபானந்த வாரியார் பாரதம் சொல்லி 5 கம்பெனி ஒன்றாகச் சேர்ந்து 30 நாள் நாடகம் நடத்தினார்கள். அதில் தேவனின் நாடகக் கம்பெனியும் கலந்துகொண்டது.

ஆக்கூர் சீனிவாசனிடம் தேவாரம் பாடல்களை எழுதி வாங்கி வளர்ப்பு மகனிடம் மனப்பாடம் செய்யக் கொடுத்தார் சித்தப்பா. பெரியவர்களின் ஆதரவில் சிறுவயதில் அர்ச்சுனன் தபசில் மரமேறத் தொடங்கி இன்றுவரை தேவனின் கலைப்பயணம் தொடர்கிறது.

கூத்துக்கலையின் நுட்பங்கள்

அர்ச்சுனன் தபசு கூத்தின்போது மரத்தின் மேலேறி தவமிருந்து எலுமிச்சம் பழம் போட்டால், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருந்துவருகிறது.

the-real-face-of-mahabharata-koothu-artist-god-for-45 years

தாத்தா, அப்பா அடுத்து சித்தப்பா என கூத்துக் கலையின் நுட்பங்களைப் படிப்படியாகக் கற்றுக்கொண்டார் தேவன். பேச்சைத் தொடரும் அவர், “அந்தக் காலத்தில் கணபதி தோத்திரம் பாடி நாடகம் தொடங்கும்.

சிறப்பாக நடப்பதற்குக் கலைவாணி அருள்பாலிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவார்கள். இன்று கூத்துக் கலை வெகுவாக மாறியிருக்கிறது.

தெருக்கூத்தே காலத்திற்கேற்ப மாறியிருக்கிறது. அந்தக் காலத்துக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் மக்கள் ரசிக்கமாட்டார்கள். நடை, உடை, பாவனைகளை மாற்றி ஒரு ரசிப்புத்தன்மையைக் கொண்டுவருகிறோம்.

25 கிலோ ஆடை ஆபரணங்கள்

கூத்து வேடங்களுக்குத் தேவையான கிரீடம் மற்றும் அலங்கார உடைகளை நாங்களே செய்துகொள்வோம். எங்கள் உடலில் ஆடை ஆபரணங்களைச் சுற்றினால் 25 கிலோ இருக்கும். இந்தியா முழுவதும் கலைக்காகப் போய் வந்திருக்கிறேன். அமெரிக்கா வரை போய் வந்துவிட்டேன்.

the-real-face-of-mahabharata-koothu-artist-god-for-45 years

இரவு 10 மணிக்குத் தொடங்கி காலை 7 மணி வரை நாடகங்கள் நடைபெறும். எனக்கு 18 ராத்திரி மகாபாரதக் கதைகளின் கூத்து தெரியும். மாரியம்மன் தெருக்கூத்து நாடக சபா என்ற எங்கள் நாடக கம்பெனியில் 17 பேர் இருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களைப் போன்ற கூத்துக் கலைஞர்களை அரசு கவனிக்க வேண்டும். இன்று மக்கள் தாய்ப்பாலை மறந்துவிட்டார்கள். புட்டிப்பாலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்கிறார்.

-சுந்தரபுத்தன்

Related Posts
now-enjoy-your-tea-in-an-edible-biscuit-cup-at-this-tea-stall-in-madurai-tamil-nadu
Read More

மதுரையைக் கலக்கும் பிஸ்கட் கப் டீ

பெரும்பாலான டீக்கடைகளில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் கப்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி கப் சுகாதாரம் குறித்த அச்சத்தையும், பிளாஸ்டிக் கப் சுற்றுச்சூழல் குறித்த பயத்தையும்…
what-are-the-changes-to-come-in-tamil-nadu-higher-education-investigates-nedunchezhiyan
Read More

தமிழக உயர்கல்வியில் வர வேண்டிய மாற்றங்கள் என்ன? – ஆராய்கிறார் நெடுஞ்செழியன்

தமிழகத்தில் மே மாதம் அமையப்போகும் புதிய அரசு உயர்கல்வியில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்களை ஓபன் ஹாரிசான் தளத்திடம் விரிவாகப் பேசினார் கல்வியாளர் தா. நெடுஞ்செழியன்.…
pudukkottai-tea-stall-owner-gifts-500-copies-of-pen-yen-adimaiyanal-to-customers-on-periyars-birth
Read More

பெரியார் புத்தகத்தை 500 பேருக்கு வழங்கிய டீக்கடைக்காரர்

`பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தை 500 பேருக்கு அன்பளிப்பாக வழங்கி பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் கிராமத்தைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர்…
cinema-training-for-7000-rural-students-thirunavukarasu-the-shadow-of-success
Read More

“7000 கிராமப்புற மாணவர்களுக்கு சினிமா பயிற்சி” – வெற்றிநடை போடும் `நிழல்’ திருநாவுக்கரசு

சென்னையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது `நிழல்’ திரைப்பட இயக்கம். இந்த இயக்கம் நவீன சினிமா, நடிப்பு மற்றும் திரைத் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வையும்…
Total
21
Share