விவசாயம் நாளுக்குநாள் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. குறிப்பாக ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயத்துக்கு பலரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இயற்கை தொட்டி
இந்நிலையில், அரி என்ற கேரள விவசாயி மாடித் தோட்டங்களில் பயன்படுத்த வசதியாக எடை குறைவான இயற்கை தொட்டிகளை உருவாக்கியுள்ளார். செடிகள் செழித்து வளர்வதற்கான ஊட்டச்சத்துகளை கலந்து இந்த தொட்டியை அவர் உருவாக்கியுள்ளதுதான் சிறப்பு.

இது குறித்து அவர் கூறுகையில், “தாவரத்தின் சிறந்த வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்துக்கும் உதவும் பல இயற்கை கூறுகளைக் கலந்து இந்த தொட்டியைத் தயாரித்துள்ளேன். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் புத்தகக்கடையை தொடங்கினேன்.
கைகொடுத்த புத்தகங்கள்
அப்போது அங்கு விவசாயம் சார்ந்த புத்தகங்களைப் படித்தேன். அந்தப் புத்தகங்கள்தான் விவசாயத்தை மேற்கொள்ள எனக்கு உந்து சக்தியாக அமைந்தன.
அரசுப் பணியில் இருந்தபோது தினமும் 15 மணி நேரம் கணினி முன் செலவழித்தேன். இது எனது ஆரோக்கியத்தைப் பாதிக்கத் தொடங்கியது. எனது உடல்நிலையை மேம்படுத்த எனது நிலத்தில் காய்கறி விவசாயத்தைத் தொடங்கினேன்.
இயற்கை பண்ணை
2016 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்பில் பங்கெடுத்தேன். முதலில் நண்பரின் 10 ஏக்கரில் விவசாயத்தைத் தொடங்கினேன். இந்தப் பண்ணையை உருவாக்க ரூ.10 லட்சம் வரை செலவழித்தேன்.
இதில் வெற்றி பெற்றேன். மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரை காய்கறிகளை விற்பனை செய்தேன். திடீரென அந்த நிலத்தை காலி செய்யச் சொன்னதால் பெரும் இழப்பு ஏற்பட்டது.
தொட்டிகள் தயாரிப்பு
2020 ஆம் ஆண்டு செடி தொட்டிகளை விற்பனை செய்யும் விநியோகஸ்தர் ஆனேன். அப்போதுதான் செடி தொட்டிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்தேன்.
எனினும், பல வாடிக்கையாளர்கள் தங்கள் செடிகள் வாடிப்போனதாக புகார் தெரிவித்தனர். விசாரித்தபோது, செடிகளை வளர்க்கும் தொட்டிகளை எனக்கு தயாரித்துக் கொடுத்தவர் விவசாயத்துறையில் அனுபவம் இல்லாதவர் என்று தெரிந்தது.

அவரிடம் தொட்டிகளை வாங்கியதால் எனக்கும், ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது.
ஊட்டச்சத்து தொட்டிகள்
நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். அதன்பிறகு ஊட்டச்சத்துகளைச் சேர்த்து செடிகளை வளர்க்கும் தொட்டிகளை தயாரித்தேன்.
இந்த தொட்டிகளில் மிளகாய் மற்றும் சில காய்கறிகளை பயிரிட்டேன். அனைத்தும் ஆரோக்கியமாக வளர்ந்தன.

தொட்டியைத் தயாரிக்கும் கலவையை உருவாக்கும் பணியில் நானும் என் குடும்பத்தாரும் ஈடுபட்டுள்ளோம்.
தற்போது விற்பனையையும் தொடங்கி விட்டேன். வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தொட்டி தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.
-எம். மோகன்
நன்றி: திபெட்டர் இந்தியா