பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருக்கிறது.
பாகிஸ்தான் – இங்கிலாந்து டெஸ்ட்
பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ராவல்பிண்டி நகரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்,
தொடக்க வீரர்கள் அதிரடி
ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போன்று இருவரது ஆட்டமும் தொடக்கத்திலேயே அமர்க்களமாக இருந்தது.
ஆடுகளமும் முழு ஒத்துழைப்பு கொடுக்க இருவரும் ரன்மழை பொழிந்தனர். பாகிஸ்தான் பவுலர்களின் எந்த முயற்சியும் இவர்களின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை.

பென் டக்கெட் 110 பந்து எதிர்கொண்டு 15 பவுண்டரிகளை விளாசி, 107 ரன்கள் எடுத்தார். கிராவ்லி 21 பவுண்டரிகளை அடித்து 122 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
நான்கு பேர் சென்சுரி
அடுத்து வந்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 23 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், விக்கெட் கீப்பர் ஆலி போப்பும், ஹாரி புரூக்கும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

போப் 108 ரன்கள் எடுக்க, ஹாரி புரூக் முதன்முறையாக சதம் அடித்து பாகிஸ்தான் அணியினரை மிரள வைத்தார்.
இங்கிலாந்து அணி சாதனை
முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 506 ரன்கள் குவித்து ரசிகர்களை மலைக்க வைத்தது. 145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே நாளில் 500 ரன்களுக்கு மேல் எடுக்கப்படுவது இது 5ஆவது நிகழ்வாகும்.
ஆனால் முதல் நாளில் ஒரே அணி, 500 ரன்கள் திரட்டியது இதுவே முதன்முறை. 1910ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 494 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமான சாதனையாக இருந்தது.
112 ஆண்டு சாதனை முறியடிப்பு
112 ஆண்டுக்கால சாதனையை இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் ஒரே அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் சதம் அடித்து இருப்பதும் இதுவே முதன்முறை. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு சாதனை மகுடம் சூட்டப்பட்டுள்ளது.