கொரோனா பாதித்த கிராம மக்களுக்கு மருந்துகளை வழங்கும் இன்ஸ்டாகிராம் குழு

team-sahaay-is-supplying-covid-19-essentials-in-the-villages-of-gujarat
[speaker]

கொரோனா இரண்டாவது அலையில் குஜராத்தின் கிராமங்களுக்குச் சென்று போதிய மருந்துகளைக் கொடுத்து உதவியிருக்கிறார்கள் `டீம் சஹாய்’ என்ற இளைஞர் குழுவினர்.

ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரே சிந்தனை கொண்ட சில நண்பர்கள், கொரோனா இரண்டாவது அலையில் கிராமப்புறங்களுக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடிவு செய்தனர். இந்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. பின்னர் கொரோனா நிவாரணப் பணிக்காக ஏராளமானோர் இந்தக் குழுவில் இணைந்தனர்.

இதனையடுத்து தங்கள் இன்ஸ்டாகிராம் குழுவுக்கு `டீம் ஷஹாய்’ என்று பெயரிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினர்.

பழங்குடியின மக்கள் வாழும் பகுதி :

இதில் உள்ள ஜீல் ஷா என்ற வழக்குரைஞர் தன் கணவர் ஷாய்ல்லி ஷா மற்றும் மற்ற தன்னார்வலர்களுடன் இணைந்து குஜராத்தின் கிராமங்களுக்குச் சென்று மருந்துப் பொருட்களை வழங்கினார்.

team-sahaay-is-supplying-covid-19-essentials-in-the-villages-of-gujarat

இது குறித்து ஜீல் ஷா, “கொரோனாவை எதிர்கொள்ளத் தேவையானவை நகரங்களிலும் கிராமங்களிலும் இல்லாமல் இருந்தது. மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்கவில்லை. மருத்துவமனைகள் காலியாகக் கிடந்தன. பிறப்பு சான்றிதழே இல்லாத பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கும் நேரில் சென்றோம்.

அவர்கள் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவர்களுக்கு ஆக்சிமீட்டர்களை வழங்கினோம். குஜராத்தின் கிராமப்புறங்களில் தொடர்ந்து பணியாற்றிய எங்களுக்குப் பலரும் நன்கொடைகள் அளித்தனர். சிறிதும் களைப்படையாமல் நாங்கள் பணியாற்றினோம்.

அம்மா, குழந்தைகளுக்கு சிகிச்சை :

2 குழந்தைகளுக்கும் அவர்களது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் ஆக்சிஜன் படுக்கைக்காக அலைந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் எங்கள் உதவியை நாடினர். நாங்களும் பல மருத்துவமனைகளில் தேடியும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை.

ஆம்புலன்ஸை வரவழைத்து அதிலிருந்த ஆக்சிஜன் மூலம் அந்தக் குழந்தைகளின் அம்மாவை சுவாசிக்க வைத்தோம். தாங்கள் குணமடைந்துவிட்டதாகக் கூறி, 20 நாட்கள் கழித்து அதில் ஒரு குழந்தை எனக்கு செல்ஃபி அனுப்பியிருந்தது. இது மனநிறைவைத் தந்தது’’ என்றார்.

9 லட்சம் வரை நிதி :

டீம் சஹாயின் மற்றொரு உறுப்பினராக ஷாய்ல்லி ஷா, “என்ஜிஓக்கள் உதவியுடன் இதுவரை ரூ. 9 லட்சம் வரை நிதி திரட்டியுள்ளோம். சிலர் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

team-sahaay-is-supplying-covid-19-essentials-in-the-villages-of-gujarat

உடல்களைப் போர்த்தும் கவர்கள் கொடுத்தனர். இன்னும் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இவை அனைத்தையும் நாங்கள் விநியோகித்துவிடுவோம்.

சமீபத்தில் அகமதாபாத்தை புயல் தாக்கியபோது, அகமதாபாத் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 10 நாட்கள் உணவளித்தோம். ரேஷன் அட்டைகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உதவி செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ” என்றார்.

-எம்.மோகன்

Total
1
Share