சைக்கிளில் சென்று கொரோனா நோயாளிகளுக்கு உதவும் 70 வயது முதியவர்

70-year-old-hyderabad-man-cycles-his-way-to-help-people
[speaker]

அடுத்தவருக்கு உதவுவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த 70 வயது ஸ்ரீனிவாஸ்.

கொரோனாவின் இரண்டு அலைகளும் நல்ல மனிதர்களையும், மனிதநேய மிக்கவர்களையும் அடையாளம் காட்டியிருக்கின்றன. ஆக்சிஜன் இன்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு ஓடோடிச் சென்று ஆக்சிஜன் வழங்கிய முகம் தெரியாத மனிதர்கள் ஆயிரம் பேர்.

பசியால் வாடிய கொரோனா நோயாளிகளுக்கு நேரத்துக்கு உணவை வழங்கி உபசரித்த நல்ல இதயங்கள். இப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கொண்டிருந்தவர்கள் என்றென்றும் நினைவில் நிற்பார்கள்.

இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை இக்கட்டான நேரத்தில் நேசக்கரம் நீட்டி, பிறர் துன்பம் போக்கி மனமகிழ்ந்திருக்கிறார்கள்.

கொரோனா விழிப்புணர்வு :

இதற்கு சமீபத்திய உதாரணமாக 70 வயது ஸ்ரீனிவாஸ் திகழ்கிறார். ஏர் இந்தியாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர். இல்லாதோருக்கு உதவ வேண்டும் என்று எப்போதும் விரும்புவார். அந்த விருப்பத்தை கொரோனா இரண்டாவது அலையின்போது முழுமையாக நிறைவேற்றிக் கொண்டார்.

இது குறித்து அவர், “சைக்கிள் ஓட்டுவது எனக்குப் பிடிக்கும். கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ஹைதராபாத் ரெலீஃப் ரைடர்ஸ் அமைப்பில் சேர்ந்தேன். சைக்கிளிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், கொரோனா காலத்தில் உதவுவதும் இந்த அமைப்பின் நோக்கம்.

சுற்றுச்சூழல் பிரச்னை :

மக்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பதுதான் இந்த அமைப்பின் பணி. இந்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அதனை நன்றாகப் பயன்படுத்தி சைக்கிளில் சென்றே பலருக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்தது மன நிறைவை அளித்தது.

தேவைப்படுவோருக்கு விரைந்து சென்று உதவ அனைவரும் முன் வரவேண்டும். சுற்றுச்சூழல் பிரச்னையை மனதில் வைத்து, வீட்டிலிருந்து அருகில் உள்ள இடங்களுக்குச் சைக்கிளில் செல்லுங்கள் ” என்றார்.

ஓய்வுக்குப் பிறகு, டேபிள் டென்னிஸ் விளையாடுவதையும், வீட்டருகே சைக்கிளிங் செய்வதையும் ஸ்ரீனிவாஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, தேவைப்படுவோருக்கு தன்னாலான உதவிகளையும் செய்து வருகிறார்.

-எம்.மோகன்

Total
14
Share